தமிழ்க் கவிதைகளில் சமீபத்தில் உரத்து ஒலிப்பது பெண் கவிஞர்களின் குரல்களே. ஆனால், கவிஞர்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்களை ஆண் பெண் என்று பிரிப்பதை மறுக்கிறார் அம்பை தனது கட்டுரை ஒன்றில். அதில் 'ஒரு பெண் என்ற நிலையில் இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?' என்பதுப் போன்ற கேள்விகளை கண்டிக்கிறார். ஏன் இந்த கேள்வியை ஆண் படைப்பாளிகளை நோக்கி யாரும் கேட்பதில்லை என்பதாக இதன் உள்ளார்ந்துள்ள நுண் அரசியலை அம்பலப்படுத்தி பேசுகிறார். காரணம் பெண்கள் எழுதிவிட்டார்கள் என்பதற்காகவே அதனை தனிச்சிறப்பான தன்மையுடன் பார்ப்பதே பெண் குறித்து உள்ளார்ந்துள்ள சாராம்சவாத பழகிய “பெண் ஒரு இரண்டாம் பால்“- என்கிற ஆதிக்கச் சொல்லாடலின் விளைவுதான். பெண் படைப்பாளிகளை ஒரு தனித்தொகுதியாக பார்ப்பது இன்றைய சூழலில் மிகைத்து வரும் அடையாள அரசியல் சார்ந்த ஒரு நிலைப்பாடு என்பதால் அது குறித்த எசசரிக்கையுடனே இந்த “பெண் கவிஞர்கள்” என்கிற சொல்லை பாவிக்க வேண்டியுள்ளது. பெண் என்பதை இயற்கை சார்ந்ததான உடலியல் வேறுபாட்டு அடிப்படையில் அனுகாமல் பெண் என்பதை ஒரு கலாச்சார அரசியல் கட்டுமானமாகக் கொண்டு அனுகப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த எச்சரிக்கையை முன்வைக்க வேண்டியுள்ளது.இதன்பொருள் 'பெண்கவிஞர்கள்' என்கிற அடையாளத்தை மறுப்பதல்ல. அந்த அடையாளத்தில் மட்டுமே நாம் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதுதான்.

0 comments: