Tuesday, January 31, 2017

அறிவுஜீவி சினிமாவும் மசாலா சினிமாவும்

காக்காமுட்டை என்ற தமிழ் திரைப்படத்தின் மீது தமிழின் அனைத்து அறிவுசார் உணர்வுசார் எந்திரங்களின் ஒளிப்பாய்ச்சல்களும் இயக்கங்களும் அரைபடத்துவங்கியபோது பெருவாரியான வாசகங்களில் வெளிப்பட்டது இரண்டு கூற்றுகளே. ஒன்று உலகப்படத்தின் தரத்தை எட்டிவிட்டது. இரண்டு சேரிவாழ் மக்களின் யதார்த்தத்தை அப்படியே திரையில் விரித்துவிட்டது. உபபிரதியாக அத்திரைப்படத்தை எதிர்த்து பேசுபவர்கள் அறிவுஜீவிகளாக தங்களை காட்டிக் கொள்பவர்கள் என்கிற முகநூல் வாசகம் துவங்கி பல சினிமா இதழ்களின் சிறப்பு மலர்களில் வந்த சிந்தனையை தூண்டும் கட்டுரைகள் வரை அந்த அரைபடல் எந்திரங்களின் அங்கமாக வெளிப்பட்டது. இனி அத்திரைப்படம்பற்றி எழுத என்ன உள்ளது என்பதுவரை எழுதி தள்ளப்பட்டுவிட்ட ஒரே தமிழ்த் திரைப்படம் என்ற சிறப்பை பல விருதுகளுக்கு மத்தியில் பெற்றது என்பது தமிழர்களாக அடையாளமானவர்களுக்கு பெருமிதம் தரக்கூடிய ஒன்றே.
இப்பெருமிதங்களுக்கிடையில் காக்கா முட்டை அறிவுஜீவிகளுக்கான படம் இல்லை என்று சினிமா பத்திரிக்கைகள் சிலாகிக்கின்றன. அறிவுஜீவிகளுக்கான படம் என்னவாக இருக்கும்? அல்லது சினிமாவில் அறிவுஜீவிகளுக்கானது, பாமரர்களுக்கானது, படித்தவர்களுக்கானது, முட்டாள்களுக்கானது என்ற வகைத்திணை எதாவது உண்டா?

முன்சொன்ன முதல்வாசகத்தில் தடுத்தோ தடுக்கியோ விழுந்துவிட்ட சொல்லான உலகப்படம் என்ற சொல் எதன் குறியீடாக மற்றும் எதன் குறிப்பீடாக பொருள் கொள்ளப்படுகிது, அப்பொருள்கொள்தலின் அரசியல் என்ன

Saturday, January 28, 2017

பெண் எனும் பேரச்சம் - பெண்ணிய பாலியலும் ஆண்களும்
தமிழ்க் கவிதைகளில் சமீபத்தில் உரத்து ஒலிப்பது பெண் கவிஞர்களின் குரல்களே. ஆனால், கவிஞர்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்களை ஆண் பெண் என்று பிரிப்பதை மறுக்கிறார் அம்பை தனது கட்டுரை ஒன்றில். அதில் 'ஒரு பெண் என்ற நிலையில் இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?' என்பதுப் போன்ற கேள்விகளை கண்டிக்கிறார். ஏன் இந்த கேள்வியை ஆண் படைப்பாளிகளை நோக்கி யாரும் கேட்பதில்லை என்பதாக இதன் உள்ளார்ந்துள்ள நுண் அரசியலை அம்பலப்படுத்தி பேசுகிறார். காரணம் பெண்கள் எழுதிவிட்டார்கள் என்பதற்காகவே அதனை தனிச்சிறப்பான தன்மையுடன் பார்ப்பதே பெண் குறித்து உள்ளார்ந்துள்ள சாராம்சவாத பழகிய “பெண் ஒரு இரண்டாம் பால்“- என்கிற ஆதிக்கச் சொல்லாடலின் விளைவுதான். பெண் படைப்பாளிகளை ஒரு தனித்தொகுதியாக பார்ப்பது இன்றைய சூழலில் மிகைத்து வரும் அடையாள அரசியல் சார்ந்த ஒரு நிலைப்பாடு என்பதால் அது குறித்த எசசரிக்கையுடனே இந்த “பெண் கவிஞர்கள்” என்கிற சொல்லை பாவிக்க வேண்டியுள்ளது. பெண் என்பதை இயற்கை சார்ந்ததான உடலியல் வேறுபாட்டு அடிப்படையில் அனுகாமல் பெண் என்பதை ஒரு கலாச்சார அரசியல் கட்டுமானமாகக் கொண்டு அனுகப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த எச்சரிக்கையை முன்வைக்க வேண்டியுள்ளது.இதன்பொருள் 'பெண்கவிஞர்கள்' என்கிற அடையாளத்தை மறுப்பதல்ல. அந்த அடையாளத்தில் மட்டுமே நாம் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதுதான். 
”இறைவி” பெண் புறத்தில் மடியும் ஆண் அகம்
Related image

மே 17ம், தமிழினப்படுகொலையும் இறைவிதிரைப்படத்தின் ஒரு பின்புலக் களன் என்றால் தாய் தெய்வமும் சிலப்பதிகாரமும் இன்னொரு பின்புலக்களனாகும். இந்த இரு பின்புலக்களன்களின் காரணமாகவே இறைவிஒரு சமூக விரோத கதையாக மாறாமல் தமிழ் சமூகம் அகம் சிதைந்த மனிதர்களால் நிரம்பிய சமூகம் என்ற காத்திரமான விமர்சனத்தை முன்வைக்கிற படமாகிறது. - எம்.டி.எம். (அகம் உருக்குலைந்து பொருக்காடிவிட்ட சமூகத்தின் கதை இறைவி’)

நவீனத்திற்கு பிந்தைய சிதைவுற்ற. உருக்குலைந்த சமூகத்தில் பொருளாதாராத்தின் அரசியல் நுகர்விலும் அதற்கான சந்தையிலும், பாலுந்தங்களின் பொருளியல் (லிபிடனல் எக்கானமி) பெண் உடலிலும் முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில் கார்த்திக்-சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ளஇறைவிதிரைப்படம் குறித்து தீர்க்கமாகவும், விரிவாகவும் சிந்திக்க வேண்டியுள்ளது. ஓர் இயக்குநர் தமிழீழப் படுகொலையையும், ஒடுக்கப்பட்ட பெண் உடலையும் அதன் மீதான ஆணாதிக்க திமிரையும் ஒரு தளத்தில் வைத்து திரைப்படம் பண்ணவேண்டிய தேவை என்ன என்பதும் இதனோடு சிந்திக்க வேண்டியதாக உள்ளது. பெண் ஆணின் மற்றமையல்ல எதிர்மை என்ற அடிப்படையான கோட்பாட்டிலிருந்து உருவாகுகிறது இத்திரைப்படத்தின் கதையாடல். பெண்ணை புறமாக வைத்து அதன் மடிப்பில் உருவாகியுள்ள ஆணின் அகத்தை முன்வைக்க முனைகிறது.
இறைவிஎன்ற சொல் தமிழ்த்தாய்த் தெய்வமான கண்ணகியைச் சுட்டுகிறது என்பதைவிட இறைவன் என்பதற்கான ஓர் எதிர்மைச் சொல்லாகக் கட்டப்பட்டது என்பதை மனிதி என்ற மனிதன் என்கிற ஆண்பலினத்திற்கு எதிர்மையாகக் கட்டமைக்கப்பட்டு திரையில் அறிமுகமாகும் சொல்லோடு இணைத்து நோக்கலாம். இறைவி என்பது பெண்தெய்வத்தைக் குறிப்பதும், திரைப்படத்தில் வரும் ஒரு பாடல்வரியுடன் ஒப்பிட்டால் அது எல்லாத் தெய்வத்திற்கும் மூலத்தெய்வம் என்பதான பொருளையும் முன்வைக்கிறது.
இறைவன் ஏகன் என்று நம்பும் செமட்டிக் மதங்களான யூத-கிறித்துவ-இஸ்லாமிய மதங்களாகட்டும் அகம்பிரம்மாஸ்மிஎன்கிற இந்து-(அத்வைத) வேதமதமாகட்டும்  இவை பாலினபகுப்பை இறை என்ற கருத்தாக்கத்தில் முன்வைப்பதில்லை. காரணம் அம்மதங்கள் ஒருமை என்பதிலிருந்து தங்கள் மதக்கதையாடலைத் துவங்குகின்றன. உயிரினங்கள் இறையின் படைப்பு அதில் பால்வேறுபாடு என்பது உயிர் உற்பத்தி நிமித்தம் உருவாக்கப்பட்டது என்பதே அக்கதையாடல்கள் பின்னலாக்கப்பட்டிருப்பதின் அடிப்படை. அவற்றில் குடும்ப-அரசு-சமூக நிறுவன அமைப்பு என்கிற ஒழுங்கமைப்பைக் கட்டமைப்பதில் எல்லா மதங்களும் அடிப்படை அலகாகக் குடும்பம் என்பதையும் அதற்காகப் பெண்உடல் என்பதை வரைதோலாகக் கொண்டு கற்பு, பத்தினித்தன்மை, புனிதம், தெய்வம் தொழால் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யனப் பெய்யும் மழை என்று மழையைப் பத்தினி வாக்கின் குறிநிலையாக்குதல் உள்ளிட்டவற்றை எழுதிவைத்துள்ளன. இப்படியாக, அடிப்படையில் தனிச்சொத்தும், அரசும் நிலைக்க வாரிசு சொத்துரிமை என்ற தொடர்ச்சியில் குடும்பம் என்ற அமைப்பை நிலைநிறுத்துவது மதங்களின் கடமையாகிறது.
ஒழுங்கற்ற ஓர் அமைப்பைச் சமூகஒழுங்காக அமைப்பதற்கும் அதில் அரசு என்கிற அதிகார அமைப்பின்வழி கண்காணிக்கவும் ஆன ஒரு கட்டமைப்பை உருவாக்க மதம் என்கிற பாவ-புண்ணிய, சொர்க்கம்-நரகம் உள்ளிட்ட கட்டமைப்புகள் உருவமைந்தது. இந்தக் கட்டமைப்பில் பெண்உடல் என்பது புனிதப்படுத்தவும், ஆணிய அரசஅதிகாரத்தில் தந்தமைக்குள் கட்டுப்படுத்தி வைக்கவும் உருவமைக்கப்பட்ட ஏற்பாடே இறைவன். ஏக-இறைவன் எனப் பேசும் மதங்கள் பாலினமாகக் கடவுளை முன்வைக்காததால், அவை ஆண்பாலினமாகக் கருதப்படுகின்றதே தவிர அவற்றின் மறைநூல்களில் ஆண்பாலினமாக அவை வர்ணிக்கப்படுவதில்லை. இத்தாலியின் மார்க்சிய திரை இயக்குநரான  பசோலினி ஏசுநாதரின் வரலாற்றை த கோஸ்பல் அக்கார்டிங் டு செயின்ட்மாத்யு” என்றத் திரைப்படமாக எடுத்துள்ளார். அதில் வரும் இறையின் செய்தியைக் கொண்டுவரும் தூதர் ஒரு பெண்ணாகக் காட்டப்படுவார். அப்பெண் இறை என்ற ஆணியத்தன்மைக்கு எதிரான ஓர் இடையீடாக மிகச்சாதரணமான எந்த ஒரு மிகைப்படுத்தல், புனிதத்தன்மைக் கொண்டதாக இல்லாமல் ஒரு குடியானவப் பெண்ணாகக் காட்டப்பட்டிருப்பார். கிறித்துவ மும்மைக் கோட்பாட்டில் மட்டுமே பிதா-சுதன்-பரிசுத்தஆவி என்கிற கட்டமைப்பு உள்ளது. அதிலும் மேரியை ஒரு கடவுள் நிலையில் வணங்கும் வழக்கும் உள்ளது.
பெருமதங்களாக உருவாகிவிட்ட மதங்களைத் தவிர்த்துப் பழங்குடி மதங்கள், கிரேக்க மற்றும் இன்று இந்து மதமாகக் கருதப்படும் வேதமதம் உள்ளிட்டவை மட்டுமே பல தெய்வக் கொள்கைகளை முன்வைப்பவை என்பதால் அதில் எல்லாவித குடும்பஉறவுகளும் கடவுளாக அறியப்படுகின்றன. மனிதக்குடும்பம் கடவுள் குடும்பமாகத் தளமாற்றம் பெற்றிருக்கிறது. இறைவன் என்ற சொல் ஏகத்தைக் குறிக்குமெனில் இறைவி என்ற சொல் அதற்கு ஓர் எதிர்மையாக உருவாகும் ஒன்றே. இறைவி என்ற கார்த்திக்சுப்புராஜின் திரைப்படம் இந்த எதிர்மையிலிருந்தே தனது கதையாடலைத் துவங்குகிறது.
நான்கு பெண்களை மையப்படுத்திய இறைவி, நான்குபேரையும் அதன் தர்க்கங்களில் வெவ்வேறு தளத்தில் முன்வைக்கிறது. கணவனுக்காக உழைத்து, அவனது அனைத்து ஒடுக்குமுறைகளையும் அனுபவித்த அம்மா பாத்திரம் மரபான பெண்ணைக் குறிநிலைப்படுத்திய மௌனம் இறுகிய ஆற்றல்கள் உள்ளடக்கப்பட்ட பாவமன்னிப்பிற்கான அன்னை என்ற இறைவி பிம்பம்மாக ஆக்கப்பட்டுள்ளது. அதை வளர்த்திருக்கலாம் இன்னும் ஆழ்ந்தத் தளத்தில். இந்த அம்மாவின் மீதான ஒடுக்குமுறைகளைக் கண்டு வளர்ந்த ஜெகன் என்ற மகனே கதையை நடத்திச் செல்கிறான். பெண்ணின் விடுதலைப்பற்றியும், கண்ணகியின் எதிர்க்கதை வடிவத்தையும் முன்வைக்கிறான். பெண்கள் குடும்பம் என்ற அமைப்பால் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற மரபால் பெரும் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்று பொருமுகிறான். கடைசியில் தன்னைக் கவர்ந்த பொன்னி என்ற பெண்ணிற்காக அவளக்குச் சுதந்திரமான அல்லது ஒரு சிறந்த வாழ்வைத் தர தன்னால் மட்டுமே முடியும் என்று அவளுக்காக, அவளது கணவனைக் குற்றங்களில் சிக்கவைத்து அவளைத் தனக்கானவளாக ஆக்க முனைகிறான். தர்க்கரீதியாக இங்கு எழும் கேள்வி தாயைக் கொடுமைப்படுத்தி கோமாவிற்குத் தள்ளிய தந்தையை ஒன்றும் செய்யவில்லை, மாறாகத் தன்னைக் கவர்ந்த பெண்மீதான காதலை முதன்மைப்படுத்தியே செயல்படுகிறான் ஏன்? அவனும்கூட பெண் என்பதில் ஈர்ப்பு கொள்வது வழக்கமான அழகு அல்லது புனிதம் உள்ளிட்ட ஆணிலைவாத கருத்தாக்கங்களில்தான். இறைவி என்கிறப் பொதுப் பெண்கள் ஒடுக்குமுறை என்பதற்காக அல்ல.
அடுத்து பொன்னி. ஒரு கிராமத்தில் தமிழ் சினிமா நாயகர்களின், சினிமாக்காதலையும், குடும்பங்களையும் பார்த்து வளர்ந்த பெண். பெரிய லட்சியங்கள் அற்ற அன்பு, அரவணைப்பு, காதல் என்ற ரீதியில் எதிர்காலம் பற்றிய சராசரிக் கனவுகள் கொண்ட ஒரு பெண். அவள் இறைவியாக மாறுவது ஜெகன் என்பவன் அவள் மேல் கொள்ளும் காதலால். கணவன் தன்னைக் காதலிக்கவில்லை, மாறாக, வேறொரு பெண்ணிடம் ஈர்ப்பு கொண்டிருக்கிறான் என்பதால் தனக்கு மறுக்கப்பட்ட காதலால் ஜெகனின் காதலை ஏற்பதாகவும், சமூகக் கட்டுப்பாட்டால் விலகுவதாகவும் காட்சிப்படுத்தப்படுகிறது. கண்ணகியின் எதிர்க்கதைவடிவமாக மாதவியின் ஸ்தானத்தைக் கையில் எடுக்கும் ஜெகன், அதாவது கண்ணகி மற்றொரு ஆணிடம் ஈர்ப்புக் கொண்டிருந்தால், கோவலன் அதை ஏற்பானா? என்கிற வழக்கமான பெணணிலைவாத அலுத்து சலித்த கேள்வியை முன்வைத்து நகர்கிறது. கண்ணகியாக உருவகித்துக் கொள்ளக்கூடிய பொன்னி காதல் கொள்கிறாள் சமூக மரபால் அதை உள்ளடக்கிக் கொள்கிறாள். இது சரசரியாக உள்ள எல்லா பெண்களிடமும் உள்ள ஒர் அகநிலையே. காதல் என்பது சாராம்சமானதாகக் கருத்தேற்றம் கொள்வதால் இது வித்தியாசமான காட்சியாக உள்வாங்கப்படுகிறது பார்வையாளர்களால். காதல் என்பது ஓர் உடனடி உணர்வு அல்லது உருவாகுதலில் வரும் உணர்வு ஆனால் அதை சாராம்சமாகக் கொள்ளும்போது இறவா உணர்வாகவும், அப்படி ஒர் உணர்வு ஏற்பட்டுவிட்டால் அதற்கு நேர்மையாகச் சாகும்வரை அவ்வுணர்வுடன் இருக்க வேண்டும் என்பதும் உடல்மீதான மனதின் அதாவது புறம் மீதான அகத்தின் ஆதிக்கம் பற்றிய பார்வையே. அல்லது பாமரக் கருத்தாக்கமாகச் சொன்னால், மனதிற்கு நேர்மையாக இருத்தல் என்பதே. திரைக்கதையாடல் பழகிய தடத்தில் பயணிப்பது இந்தத் தளத்தில்தான்.
யாழினி இவர் மற்றொரு வகைமாதிரி. கணவன் மீதான காதலால் அவனை சகிக்கிறார் ஒரு கட்டத்தில் அவன் தனது கட்டுப்பாட்டிற்குள் இல்லை என்றானவுடன் விவாகரத்துகோரி பிறிதொரு திருமணத்திற்கான முயற்சி என்று நகர்கிறார். இங்கும் விவாகரத்து என்பதும் கணவன் பிரிதல் என்பதும் வலிநிறைந்த ஒரு செயலாகக் காட்சிப்படுத்தப்படுகிறது. இதிலும் காதல் அகம் புறம் நேர்மை என்று சுற்றியடிக்கிறது கதையாடல். பொன்னிக்குக் கணவனால் காதல் மறுக்கப்பட்டது என்றால், இவளுக்கு மிகையாக அள்ளி வழங்கப்படுகிறது. இது மற்றொரு வகை காதல் கதையாடல்.
அடுத்து மலர் என்ற கணவனை இழந்த பெண். திரையில் மிகவும் புதுமையாகவும், நேர்த்தியாவும் காட்டப்படும் பெண் இவர். தாய் (வடிவுக்கரசி), பொன்னி, யாழினி போன்ற கே. பாலச்சந்தர்வகை பெண்களில் இருந்து மாறி பாலுமகேந்திராவகைப் பெண்ணாக வருபவர் இவர். கணவனை இழந்தாலும் அவரது உடற்தேவைக்காகத் தனக்குப் பிடித்தமான ஆணுடன் உறவு வைத்துக் கொள்கிறார். காதல் என்பது ஒரு வெற்றுச் சொல்லாடல். அதன் உள்ளே பதுங்கியிருப்பது காமமே என்பதை வெளிப்படுத்தக்கூடியவராக இருக்கிறார். தேவை-அளிப்பு என்கிற சந்தைப்பொருளாதாரத்தில் காதல் என்பது காமம் என்ற பரிவர்த்தனையாக மட்டுமே மிஞ்சும் என்கிற நவீனத்துவமான பெண்.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ஒரு தேர்ந்த இயக்குநர் என்பதற்கான பல காட்சியமைப்புகளை திரையில் வெளிப்படுத்தியுள்ளார். அம்மாவாக உள்ள வடிவுக்கரசியின் சூழல் (மருத்துவமனை), அவரது இல்லம் ஒரு சிற்பக்கலைநயம் கொண்ட மரபான வீடு, பொன்னியின் கிராமத்து இல்லம், பொன்னியின் கணவன் மைக்கேல் வீடும்கூட ஒரு சராசரியான வீடு, ஒரு திரை இயக்குநரின் மனைவி என்ற வகையில் காட்சிப்படுத்தப்படும் யாழினியின் அறை, இவற்றிலிருந்து விலகி நவீனமாக அமைக்கப்பெற்ற மலரின் வீடு, புத்தர் சிலையுடன் உள்ள மதுகுடிப்போர் மறுவாழ்வு மையம். இங்கு புறவெளி என்பது எப்படி அகத்தோடு இயைந்ததாக அமைகிறது என்பதை நுட்பமாக சொல்லிச் செல்லும் இடங்கள். அந்த புறவெளிகள் பாத்திரங்களின் அகத்தை முன்வைத்து நகர்வதின் வழியாகப் பார்வையாளருக்குக் காட்சிப்படுத்தப்படும் பிம்பங்கள் முக்கியமானவை. சினிமா என்பது இப்படியாக பிம்பங்களால் கட்டப்படும் அக-புற வெளி இயக்கம் என்பதைச் சரியாக முன்வைக்கிறது இத்திரைப்படம்.
மலர் மூன்றெழுத்து என்று காமத்தை (செக்ஸ்) விவரிக்கும் வசனங்கள் முக்கியமானவை. ஆண் காதல் என்பதைக் கொண்டு பெண்ணைஇறைவிஎன்பதாகத் தனது ஒடுக்குமுறையை இந்தியத்தனமாக முன்வைக்க முயல்வதைக் கட்டுடைக்கிறார் மலர் தனது நவீனத்துவத்தால். மைக்கேல் தனது மனைவியை முதல் இரவில் புணர்வது என்பது குடும்பங்களில் அன்றாடம் நிகழும் ஆண் திமிர் மிளிரும் ஒரு போகவிளையாட்டு. ஆனால், மலரிடம் அவன் கொள்ளும் உறவில் ஆண் திமிர் அற்ற சமத்துவமான ஒரு காம விளையாட்டு என்பதை ஒப்பீடு செய்யும் காட்சியும் முக்கியமானது. குறிப்பாக வர்ணங்களால் அமையப்பெற்ற கலவியைக் காட்சிப்படுத்துவது.
பெண்ணை ஒடுக்க இந்திய சிந்தனை முறை கண்டடைந்த ஒரு தொழில் நுட்பமாகக் காதல் என்பதும் தெய்வீகப் புனிதமும் இப்படத்தில் மிகவும் உக்கிரமான காட்சிகள் மூலம் காட்டப்படுகிறது. காதல் என்பது ஆண்களை வெவ்வேறு மனத்தளங்களில் ஆட்டுவிப்பதைக் காட்டிச் செல்கிறது இத்திரைப்படம். அருள் மனைவி மீதான காதலால், மைக்கேல் தோழியின் மீதான காதலால், ஜெகன் நண்பனின் மனைவி மீதான காதலால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள். காதல் என்பது ஒருவகை ஆட்டுவிப்பு மனப்பிறழ்ச்சியாகவும் குற்றத்தையும் தண்டனையையும் தியாமாகக் கொள்வதாகவும் பிம்பப்படுத்துவதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. காதலால் நிரம்பிய ஆண்கள் எல்லோரும் குற்றங்களால் நிறைகிறார்கள். கலையும் அரசியலும் குற்றச்செயல்களால் மட்டுமே விலைபோகும் நிலை உருவாகுகிறது.
இதனை மெட்டாபிலிமாக அதாவது தமிழ் திரைப்படம் உருவமைத்த திரைக்கதையாடல்கள் பற்றிய ஒரு விமர்சனமாக அல்லது அதைக் காட்சிப்படுத்துவதாகக் கொண்டால், தமிழ்த் திரைக்கதையாடலில் அதிகமும் பெண்ணிற்காகப் படம் பண்ணிய பாலச்சந்தர், பாலுமகேந்திரா போன்றவர்களால் திரையில் பழகிவந்து குடும்பம், பெண், ஆண், காதல், வீரம் போன்ற கருத்தாக்கங்களை நுட்பமாகக் காட்சிகளின் ஊடாக, பாத்திரங்களின் ஊடாக, கதையாடல்களின் ஊடாக முன்வைத்து விமர்சிக்கும் ஒரு திரைப்படமாகக் கொள்ளலாம். இதை ஒரு மெட்டாபிலிமாகக் கொண்டால் தமிழில் வந்த சிறந்த படங்களில் ஒன்று என்பதில் மறுகேள்வி இல்லை.
தமிழ்த் திரைப்படம் உருவாக்கிய பாத்திரங்களான இன்றைய தமிழர்களைக் பாத்திரங்களாகக் கொண்டு எடுக்கப்பட்ட கோவா, மாயா, ஜிகிர்தண்டா, மூடர்கூடம் போன்றவையும், தமிழ் சினிமாவைப் பகடி செய்து எடுக்கப்பட்ட தமிழ்படம், மசாலாபடம் போன்ற படங்களில் இருந்தும் இப்படம் விலகி நிற்கும் புள்ளியும் இந்த மெட்டாபிலிம் என்பதை மறைத்து படு சீரியஸாக கதையை நகர்த்திச் செல்வதே. மைக்கேல், பொன்னி போன்றவர்களின் முக்கிய திருப்பங்களை பாலச்சந்தர் மற்றும் பல தமிழ் இயக்குநர்கள் காட்டும் சிம்பாலிக் ஷாட்டுகள் வழியாகக் காட்சிப்படுத்தவதன்மூலம் இதை ஒரு மெட்டாபிலிமாகவே கார்த்திக்-சுப்புராஜ் இயக்கியிருப்பதாகத் தடம் காணலாம். சான்றாக, மைக்கேல் சிலை திருட ஒப்புதல் கொள்ளும்போது பொம்மை தலைகீழாக விழுவது போன்ற சில காட்சிகள் இயக்குநர் பஞ்ச் என்று தமிழ் சினிமாவின் 80-90-கள் கால திரைவிமர்சனம் கண்டு சிலாகித்த காட்சிகள் அவை. ரயில்நிலையத்தில் கடைசி உச்சக் காட்சியை (கிளைமாக்ஸ்) வைப்பது என்பது தமிழ்த்திரைப்படத்தின் வெற்றி ரகசிய சூத்திரங்களில் ஒன்று என்பதையும் இப்படம் தன்னளவில் காட்சிப்படுத்த முனைகிறது.
திரைப்படத்தின் முக்கியத்தளமாக முன்வைக்கப்பட்ட மே-17 ஈழப்படுகொலைகள் பற்றிய படத்தை வெளியிட முடியாத இயக்குநரே திரைப்படத்தின் மைய அச்சாகவும், அதை வெளியிடும் முயற்சிகளின் பிரச்சனைகளே கதையாடலாகவும் நகர்த்தப்படுகிறது. முதலில் மே-17 என்ற தலைப்பு இரண்டொரு இடங்களில் காட்டப்படுவதும், தமிழ் தமிழ் என்று பேசி காசு பண்ணுபவர்கள் முகத்தில் செருப்படி என்ற வசனமும் மட்டுமே அது ஈழம் பற்றிய படம் என்ற தடத்தை சொல்வதாக உள்ளது. அதிலும் அப்படம் வெளிவராமல் தடுப்பது அரசோ அல்லது ஈழ எதிர்ப்பு சக்திகளோ அல்ல மாறாக, திரைப்படம் எடுத்த தயாரிப்பாளரின் தனிப்பட்ட தன்முனைப்பே காரணமாகக் காட்டப்படுகிறது.
ஒரு அரசியல் பொறுப்புள்ள படத்தை எடுத்திருப்பவர், பொறுப்பற்றவராகவும், அதீதமாகக் காரணமற்ற ஆத்திரம் கொள்ளும் ஒருவராகவும், ஆணாதிக்கராகவும், தனது சகோதரனின் கொலைக்குப் பலி கொள்வது ஆண்மை, வீரம் என்று பேசுபவராகவம் உள்ளார் என்பதும் கருத்தியல் முரணாக உள்ளது. ஒருவேளை இப்படியான அரசியல் பேசுபவர்கள் சொந்த வாழ்வில் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பதாகக் காட்சிப்படுத்த முனைந்திருக்கலாம்.
இத்திரைப்படத்தின் ஒரு முக்கியமான சினிமாட்டிக் நுட்பம், முற்றிலுமாக இயக்குநர் தன்னை, தனது கருத்தை அடையாளப்படுத்திக் கொள்ளாத வகையில் விலகி நின்று எடுக்கப்பட்டிருப்பதே. ஆசிரியன் குரல் என்பதை முற்றிலுமாகக் கொன்றுவிட்டு கதை, அதன் தர்க்கம், அதற்கான காட்சியமைப்புகள் என்று முற்றிலுமாகக் கதையாடல் வழியாகக் காட்சிப்படுத்தப்பட்ட சினிமாவாக வந்துள்ளது என்பது இயக்குநரின் அசாத்தியமான திறனை காட்டுவதாக உள்ளது. ஆனாலும், அரசியல்ரீதியாக இந்நிலை ஈழத்தை அதன் அரசியலுக்காக உண்மையாக உழைத்தவர்களைக் கொச்சைப்படுத்துவதாகவும் உள்ளது.
திரைப்படத்தின் மற்றவகை வாசிப்புகளையும் வகைப்படுத்திப் பார்த்துக் கொள்ளலாம்
வாசிப்பு-1: இறைவன், இறைவி ஆண்-பெண் என்ற பாலின வேறுபாட்டிலிருந்து இறைவி என்பது ஒரு பேரிருப்பு அதைச் சிறுமைப்படுத்துவதே ஆண் என்ற சிற்றிருப்பு. பெண் பேரிருப்பாக இறைவியாக மாறும்போது இந்தச் சிற்றிருப்புகள் வெறும் குற்றச்சலனங்களில் திளைத்த ஆண்-திமிர்பிடித்தவர்களாக உள்ளனர்.  
வாசிப்பு-2: இறைவி சிலையைத் திருட காரணமான இருவர் படுகொலைச் செய்யப்படுகிறார்கள். அந்தத் திருட்டின் பலனை ஏற்பவன் கொலைகாரனாகிறான். இது ஒருசிவன்சொத்துகொலைநாசம்என்ற முதுமொழியின்படி இறைவியின் தண்டனை என்பதாகக் கதையை எளிமையாக முடித்துவிடலாம். இந்த எளிமையைக் குற்றஉணர்ச்சி, பெண்ஒடுக்குமுறை, ஆணாதிக்கம், ஈழப்படுகொலை என்றெல்லாம் கதையின் காட்சிகள் சுற்றப்பட்டு ஓர் ஆழ்ந்த நுட்பமாக வாசிக்கவேண்டிய சினிமாகவாக ஆக்கியுள்ளதில் தான் இயக்குநரின் திறன் வெளிப்பட்டுள்ளது.
வாசிப்பு-3: சுஜாதாவின் ஜன்னல்மலர் என்ற நாவலின் பகுதி பாதிப்பில் சிறைதண்டனையிலிருந்து மீளும் ஒருவன் தனது குடும்பத்தைத் தேடிச்சென்று திருந்தி வாழ முனைவதை எடுத்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர். பாலச்சந்தரின் சில பெண் கதாபாத்திரங்கள் மற்றும் பாலுமகேந்திராவின் ரெட்டைவால்குருவி வகைநாயகிகள் எனத் தமிழ்சினிமாவின் குறுக்குவெட்டாகக் கதையாடல்களையும் கலந்துசெய்யப்பட்டதே இறைவி.
வாசிப்பு-4: இறைவியை பார்த்தபோது ஏனோ ஆரஞ்சுமிட்டாய் என்ற விஜய் சேதுபதியின் மற்றொரு திரைப்படம் நினைவிற்கு வந்துபோகிறது. காரணம் ஆரஞ்சுமிட்டாய் அபத்தம் என்ற நவீனத்துவ உணர்வைத் தமிழ்வயப்படுத்திய ஒரு படம். இறைவி முற்றிலும் அபத்தமாகவே எடுக்கப்பட்டுள்ளதோ என்று தோன்றியது. ஆனால் இறைவியில் அபத்தம் என்ற உணர்வு ஏற்படவில்லை என்பதுடன் இவ்வுணர்வை ஏற்படுத்தக்கூடிய அளவிற்குப் படத்தோடு பார்வையாளர் உறவு கொள்ள முடியவில்லை என்பது இப்படத்தின் ஓர் இழப்பு.
வாசிப்பு-5: ஜிகிர்தண்டா அளவிற்கு இது சினிமா பற்றிய ஒரு சினிமா விமர்சனமாக வந்துள்ள ஒரு முழுமையான மெட்டாபிலிம் அல்ல. அல்லது நுட்பமாக விலகி நின்று மெட்டாபிலிமை நேரடியாகத் தடம்காட்டாமல் எடுக்கப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம். திருடியாவது சினிமா எடுப்பது என்பது ஏற்கனவே வெளிவந்த ஒரு படத்தின் கருத்தாக்கம்தான். ஆண்திமிர் என்பதை பாலச்சந்தர்வகை மொண்ணையான குடும்ப குத்துவிளக்குகளை வைத்து விளக்க முயன்றிருப்பதே ஓர் ஆறதலான விஷயம்.. ஒருவேளை பாலச்சந்தரை நக்கலடிக்க இப்படி ஒரு படத்தை அவர் எடுத்திருப்பதாக ஓர் ஆறுதலுக்கு வாசித்துகொள்ளலாம்.
ஜிகிர்தண்டா மணிரத்தினத்தின் திரைத்தனத்தை மெட்டாபிலிம் ஆக்கியதைப்போல, இப்படம் பாலச்சந்தரை தனது மெட்டாபிலிமிற்கான அடிப்படையாகக் கொண்டு எடுக்க முயன்றிருக்கிறார். ஆனால் ஜிகிர்தண்டா அளவிற்கு ஆழந்த அல்லது சினிமாட்டிக் அனுபவத்தைத் தரவில்லை. வசனங்களில்கூட பாலச்சந்தரின் போலித்தனமான பெண்விடுதலைக் குரலை வெளிப்படுத்தவில்லை. நூல்வேலி, தப்புத்தாளங்கள், அவள் ஒரு தொடர்கதை, நிழல் நிஜமாகிறது, அரங்கேற்றம் போன்ற படங்களை கலந்தாலே பாலச்சந்தரின் திரைத்தனம் என்பதை வெளிக்கொண்டு வந்துவிட முடியும். படம் பாலச்சந்தர்வகைப் பெண்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவரது பெண்விடுதலைப்பற்றிய மேலோட்டமான கருத்தைத் தொட்டுச் செல்கிறது. ஒரு முழுமையான சினிமாவாக உருவாகவில்லை என்பது அதன் திரைக்கதையில் உள்ள சிக்கலாகவும் கொள்ளலாம் அல்லது மெட்டாபிலிம் என்பதால் தமிழ்சினிமா பற்றிய தமிழ்சினிமா என்பதால் இப்படி உருவாகியுள்ளதாகக் கருதிக் கொள்ளலாம்.
வாசிப்பு-6: மனிதி வெளியே வா என்ற பாடல் வரியுடன் முடியும்இறைவிதிரைப்படம் ஆண்-பெண் என்ற எதிர்மையில், பெண்ணை இறைத்தளத்தில் வைத்து ஆணைக் குற்றவாளியாக்கி பார்வையாளர்களிடம் ஒரு மௌனத்தை உருவாக்குகிறது. படத்தின் தளம் குடும்பமும், குடும்ப அமைப்பை மீறுதலும் என்ற தளத்தில் பெண்படும் பாடுகளை காட்சிப்படுத்த முனைந்துள்ளது.
பெண்கள் மீதான ஆண்களின் வன்முறை என்பதெல்லாம் சமூகத்தில் உறைய வைக்கப்பட்டுள்ள ஒரு கருத்தாக்கம். அக்கருத்தாக்கத்தை இளக்கி சமூகத்தலிருந்து வெளியேற்ற ஆண்-பெண் என்கிற பாலினவேறுபாட்டுக்கு எதிரான அரசியலைக் கையில் எடுக்க வேண்டும். பெண் சமத்துவம், பெண் விடுதலை என்பதெல்லாம் ஒருவகையில் அதிகாரத்தின் ஆடுகளத்திற்குள் நிகழ்த்தப்படும் அரசியலே என்பதையும், பெண் மற்றும் பெண் உடல் பாலுந்தப் பொருளியலில் முதலீடு செய்யப்பட்டு பண்டமாக்கப் பட்டிருப்பதையும் நுண்ணுணர்வில் கொள்வது அவசியம். பெண் என்ற கருத்தாக்கத்தை முழுமுதலானதாக அல்லது முற்றொருமையாகக் கருதுவது ஒரு மதப்புனித விளைாயட்டாக மாறிவிடும் அபாயம் கொண்டது.
காதல்Xகாமம், உடல்Xமனம், புறம்Xஅகம், கோபம்Xபொறுமை, ஆத்திரம்Xஅடங்குதல், கலைXவியபாரம், இறைவன்Xஇறைவி, குற்றம்Xதண்டனை என்கிற எதிர்மைகளின் அணிக்கோவையில் குறுக்கும் மறுக்குமாக நெய்யப்பட்ட கதையாடலேஇறைவி”. இவற்றை காட்சிப்படுத்தும் பிம்பங்கள், பாத்திரங்கள் எல்லாம் முன்பே வந்துவிட்ட தமிழ்சினிமாக் கதையாடல்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. கதையாடல் இந்த கருத்தாக்கங்கின் பிம்பமாதல் என்ற வினையை ஒரு சரடாகக் கோர்த்து நிற்பதே திரைப்படத்தை ஒரு சீரியஸான அல்லது உக்கிரமான பெண்விடுதலைக் கதையாடலாக உணரவைக்கிறது. காலங்காலமாகப் பெண் உடல்மீது அல்லது பெண் என்ற கருத்தாக்கத்தின்மீது செலுத்தப்படும் அல்லது உறையவைக்கப் பட்டிருக்கும் வன்முறையாக ஆணிருப்பை கருத்தாக்கம் செய்கிறது.
ஆண் எதிர்மையாக ஆணியமே கட்டமைத்துள்ள பெண்ணை இறைவியாக மாற்றி பாவனை செய்வதன்மூலம் வன்முறையை புனித பாவமீட்சியின் தண்டணையாக பெண் உடலுக்குள் எழுத முனையும் இந்திய இந்து மதவாத வேத தத்துவ மரபின் ஒரு சரடாக தமிழ் சினிமா எப்படி கதையாடுகிறது என்பதைச் சொல்வதாக அமைந்துள்ளது.
பெண்ணை இறைவியாக்குவதன் வழியாக தியாகத்தின் திருஉருவாக மாற்றி சமூக பலி-உடலாக கட்டமைத்திருப்பதையும், அரசியலற்ற வெற்று உடலாகப் பெண் உடல் கட்டமைக்கப்படுவதையும் இப்படத்தினூடே சிந்திக்க முடிகிறது என்பது ஆறுதலானது. தமிழ்ச்சமூகம் இப்படத்தை இப்படியாக எதிர்கொள்வதிலிருந்து தப்பிச் செல்வதில் மட்டுமே தனக்கான அறிவுக் காரணியை, மிகை உணர்ச்சியை அகம்Xபுறம் அல்லது காமம்Xகாதல் அல்லது ஆண்Xபெண் என்பதாகக் கட்டமைத்துக்கொண்டுள்ள உடலரசியலையும் இதப்படுத்திக் கொள்கிறது பார்வையாளர்கள் எதிர்கொள்ளலாக என்பது இத்தகைய படங்கள் இன்னும் நிறைய வரவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக உள்ளது. அதற்கான நுட்ப-திட்ப இடையீட்டுத் திறணாய்வுகள் சினிமாவை ஒரு காணுதல் அனுபவமாக மாற்றுவதற்கு அவசியம் என்பதும் இத்தோடு பதியப்பட வேண்டியதாக உள்ளது. இத்திறணாய்வும் அந்நோக்கிலேயே எழுதப்பட்டது என்பதையும் சொல்லி முடிக்கலாம்.

-      ஜமாலன்29-06-2016 jamalan.tamil@gmail.com

Tuesday, January 10, 2017

“மேலும்” விருதிற்கான ஏற்புரை



நண்பர்களுக்கு வணக்கம்.

“மேலும்”-இதழ் வழங்கும் இவ்விருதைப் பெறுவதில் உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இவ்விருதை வழங்கிய “மேலும்” அறக்கட்டளைக்கும், அதனை நடத்திவரும் மதிப்பிற்குரிய “மேலும்” ஆசிரியர் சிவசு மற்றும் மதிப்பிற்குரிய தமிழவன் அவர்களுக்கும் நன்றி. விருதுகள் நபர்களை அங்கீகரிப்பதில்லை அவர்களது பணியை மற்றும் எழுத்தை அங்கீகரிப்பவை. அந்தவகையில் எனது எழுத்திற்கும் விமர்சனமுறைமைக்கும் கிடைத்த அங்கீகாரம் இது.

இச்சந்தர்ப்பத்தில் உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர் சார்த்தர் தனக்கு வழுங்கப்பட்ட உலகின் மிகப்பெரும் விருதான நோபலை நிராகரிக்கும்போது கூறிய வாசகமே நினைவிற்கு வருகிறது. நோபல் பரிசை எனக்கு தந்து என்னை நிறுவனமாக்க முயல்கிறார்கள் என்பதே அது. இக்கருத்தில் அவர் பரிசு என்பதன் வழியாக நிறுவன மயப்படுத்தம் போக்கை நிராகரிப்பது முக்கியமானது. பெரும்பாலான பரிசுகள், விருதுகள் நிறுவனமயப்படுத்தும் தன்மையிலேயே தரப்படுகிறது. பரிசு யாரால் யாருக்கு தரப்படுகிறது அதன் நோக்கம் என்ன என்பதே முக்கியம். அவ்வகையில் நிறுவனமாக தன்னை ஆக்கிக் கொள்ளாத ”மேலும்” இதழின் பெயரில் நிறுவனங்களில் பங்களிக்காத பேரா. சிவசு அவர்களால் இவ்விருது வழுங்கப்படுகிறது. இவ்விருது நிறுவனங்களுக்கும், நிறுவன முறைமைகளுக்கும் எதிராக உள்ளவர்களையும், அதனை சாராதவர்களுக்கும் வழங்கப்படுகிறது என்பது முக்கியம். சென்ற ஆண்டு விருதை அருமை நண்பர் எஸ். சண்முகம் பெற்றார். இந்த ஆண்டு எனக்கு வழங்கப்பட்டு உள்ளது. இது எனது திறனாய்வுக்கும், விமர்சனத்திற்கும் கிடைத்திருக்கும் ஒரு மதிப்பீடு மற்றும் அங்கீகாரம்.

படைப்பாளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வரும் விருதுகளிலிருந்து விலக்காகி, திறனாய்வு மற்றும் விமர்சனத் துறையாளருக்கு வழங்கப்படுவதே இவ்விருதின் சிறப்பு எனலாம். திறனாய்வாளன் எத்தனை சமூகம் முக்கியத்துவம் வாய்ந்தவன் என்பதை எனது சிற்றேடு இதழ் நேர்காணலில் விளக்கி உள்ளேன்.  வாய்ப்புள்ள நண்பர்கள் அதை வாசித்தறியலாம். குறிப்பாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விழைகிறேன். திறனாய்வாளன் என்பவன் சமுகத்தையும் படைப்பையும் இணைக்கவும், இணக்கவும் செய்பவன். பிரதிக்கும் வாசகனுக்கும் இடையில் பிரதியை சமூகவயப்படுத்துவதுடன் வாசகனையும் சமூகவயப்படுத்துகிறான். திறனாய்வு  அற்ற சமூகம் இலக்கியத்தை எப்படி பண்டமாகவும், சுவைஞர்களை உட்கார வைக்கும்  உணவு மேசையாகவும் மாற்றும் என்பதற்கு ஒரு உதாரணமே தற்போதைய தமிழ் சூழல் இலக்கிய நிலை என்றால் மிகையாகாது. திறனாய்வு  இன்றி ஒரு சமூகம் தன்போக்கை உணரமுடியாது. அவ்வகையில் திறனாய்வாளனின், விமர்சகரின் பணி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லி என் பற்றியும் எனது எழுத்து பற்றியும் ஒரு சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்.  
  
“மேலும்” இதழில்தான் எனது எழுத்துப்பணியின் விமர்சன மற்றும் கோட்பாடு சார்ந்த எழுத்துமுறை துவங்கியது. எனது ”கவிதையும் சிதைவாக்கமும்” என்ற கட்டுரை “மேலும்” இதழில் வெளிவந்தபோது எனது எழுத்திற்கான அங்கீகாரமாகவும், எழுதுவதற்கான நம்பிக்கையாகவும் எனக்குள் உருவாகியது. காரணம் “மேலும்” இதழ் தமிழக அறிவார்ந்த சிந்தனை தளத்தில் ஒரு முக்கியமான நவீனமான சிந்தனையை பிரதிநிதித்துவப்படுத்திய இதழ். தமிழ் சிந்தனையை அடுத்த தளத்திற்கு நகர்த்திய ஒரு போக்கே ”மேலும்” இதழ். தமிழில் 80-களுக்கு பிறகு அறிமுகமான புதிய விமர்சனமுறையை, சிந்தனை முறையை அதாவது அமைப்பியல் துவங்கிய பின் அமைப்பியல்வரையான சிந்தனைமுறையை தமிழில் நிகழ்த்திப் பார்த்த ஒரு ஆடுகளமே, ஒரு தளமே ”மேலும்” இதழ். அதில் எழுதிய சிந்தனையாளர்கள் குறிப்பாக தமிழவன், சிவசு, நாகார்ஜீனன், அ. மார்க்ஸ், எம்டிஎம், பிரேம் மற்றும் எஸ். சண்முகம் உள்ளிட்ட  சிறுபத்திரிக்கை தொடர்புடைய சிந்தனைாளர்களும், பல்கலைக்கழகம் சார்ந்த அறிவுப்புலப் பேராசிரியர்களும்தான் இன்று தமிழ் சிந்தனையின் விமர்சன மரபை, கோட்பாட்டு சிந்தனை தளத்தை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாக உள்ளனர்.

ஒரு சமூகத்தின் அறிவுப்புலத்தை, சிந்திக்கும் முறைமையை, உலகப்பார்வையை கட்டமைப்பது இத்தகைய சிறு சூழலைச் சார்ந்த சிந்தனைகளும், அதில் புழங்கும் அறிவுவுஜீவிகளுமே. உதாரணமாக சொல்லாடல், பணுவல், கட்டுடைப்பு, சிதைவாக்கம் உள்ளிட்ட பல வார்த்தைகள் இன்று வெகுசன  ஊடகங்களில் மிகச்சாதரணமாக புழங்குவதைக் காணலாம். இத்தகைய புழக்கத்திற்கான இச்சொற்களை அன்று உருவாக்கிய ஒரு அறிவுத்தளமே “மேலும்” இதழ்.  ஒவ்வொரு சமூகத்திற்கும் அதற்கான ஒரு சொல்லாடல் புலத்தை வடிவமைப்பதும் அதை இயக்கத்திலும், ஆட்டத்திலும் வைப்பதே இலக்கியத்தின் பணி. அதாவது முந்தைய சொல்லாடலை இன்றைக்கான தகவமைப்பாக்கி இயல்பாக்கம் செய்வதே இலக்கியத்தின் பணி. பல்வேறு உலகை படைத்தளிப்பதன் மூலம், வாழ்வதற்கான பல திறப்புகளை, சாத்தியங்களை உருவாக்குவதே இலக்கியத்தின் பணி. அத்தகைய பணியை தமிழில் முன்னின்று நடத்திய ஒரு இயக்கமே “மேலும்” என்றால் மிகையாகாது. இத்தகைய சிறப்பு மிக்க ஒரு இயக்கம் வழங்கும் இந்த விருது என்னை இன்னும் பொறுப்பு மிக்க விமர்சகனாக மாற்றும்.  அந்தவகையில் இவ்விருதை ஏற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

மௌனியின் செம்மங்குடி ஊர்தேடல் போல என்னைப்பற்றிய சிறு அறிமுகக்குறிப்பு.  நான் தஞ்சைப்பகுதியில் உள்ள பாடல்பெற்ற சைவத்தலமான குடந்தை எனப்படும் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகேஸ்வரம் என்ற ஊரில் பிறந்து வளர்ந்தவன். எங்கள் ஊர் ஒருவகையான புராணங்கள், பழங்கதைகளில் நிரம்பிய ஊர் என்பதே எனது முதல் இலக்கிய ஆர்வத்திற்கான அடிப்படை. புகழ்பெற்ற நவக்கிரகங்களில் ஒன்றான ராகுஸ்தலமே எங்கள் ஊர். அதேபோல் பிரபலமான வைணவத்தலமான தென்திருப்பதி எனப்படும் ஒப்பிலியப்பன் கோவில் உள்ளதும் எங்கள் ஊரே. இவற்றை எல்லாம்விட சுந்தர காளியம்மன் வருட உலா மற்றும் எங்கள் ஊரின் ஐதீகமும். பழங்கதையுடன் உறவும் கொண்ட ஜெம்புமாலிராஜன் கதை நாடகமும் கொண்ட ஊர்.
நாடோடியாக முடியாதவகையில் தேசங்களில் கட்டுண்டுவிட்ட நாம், நாட்டில், மண்ணில் அடையாளம் காணப்படும் இடமான ஊர் என்பதே எழுத்தாளனின் கற்பனைக்கும், இலக்கிய உணர்விற்கும் அடிப்படையாக அமைந்து உள்ளது. ஒரு உடலின் முதல் நிலமயமாதல் அதாவது தெல்யுஸ் வார்த்தைகளில் சொன்னால் “டெர்ரிட்டேரியலைசேஷன்” என்பது ஊரே. அதனால்தான் தொல்காப்பியம் அய்ந்திணைகளின் வாழிடங்களை வெவ்வேறு பெயரில் அடையாளப்படுத்துகிறது. நெய்தல் நிலம் பட்டினம் என்றும், குறிஞ்சி நிலம் காடு என்றும், மருதநிலம் ஊர் என்றும். ஆக, மருதமயமாகிவட்ட மனித வாழிடங்கள் இன்று ஊர் என் பெயரால் அழைக்கப்படுகிறது. ஆக ஒரு உடலின் நிலமயமாதலான ஊர் என்பது மனித உடலின் முதல் நினைவாக உள்ளது.

இந்த அடிப்படையில் ஒருவகை ஊர்தேடல் நினைவு என்பதில் பழமைவாத ஏக்கம் இருப்பதை உணரலாம். இத்தகைய ஏக்கத்தை ஒருவகையான பின்நவீன உணர்வு சார்ந்ததாக சொல்லலாம். காரணம் பின்நவீனம் நவீனத்திற்கு முந்தையதைப்பற்றிய ஒரு ஏக்கத்தின் அடிப்படையில் நவீனத்தில் பழமையை மறு உருவாக்கம் செய்வதன் வழியாக நவீனத்துவத்தின் உண்மையை புனைவாக்கி காட்டிவிடுகிறது. இத்தகைய பழமையின் நவீன உருவாக்கம்தான் நவீன மனிதனை நவீனத்தின் அழுத்தத்தத்திலிருந்து விடுவிப்பதாக உள்ளது. நவீனத்துவத்தின் உணர்வடிப்படைகளாக பதற்றம், அந்நியமாதல், நிலைகொள்ளாமை, பேரெந்திர அச்சம், உயிர்நிலைக்கான ஏக்கம் எனலாம். இந்த உணர்வெல்லைகள்தான் நவீனத்துவம் பேசும் “பகுத்தறிவு” என்ற ஆன்மீகத்திற்கான அடிப்படையாக மாறி உள்ளது.  நவீனத்துவ இலக்கியத்தின் தேடலும் கட்டமைப்பும் இதனை சுற்றியே பின்னப்பட்டு உள்ளன என்பது மிகைக் கூற்றாகாது. இந்த மன அழுத்தம் ஏற்படுத்தி உள்ள இலக்கிய உணர்வை ஒரு விளைாயட்டாக, ஆட்டமாக மாற்றிவைத்ததே பின்நவீன உணர்வு எனலாம்.

இப்பின்நவீன உணர்வின் ஒரு புற அடையாளமே சமீபத்தில் உருவாகிவரும் பல ‘மால்கள்’ மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள்.  இவற்றை கவனித்தால்  இவை பழமையை மறுஉருவாக்கம் செய்வதை அறியலாம். இவற்றின் பின்னணி இத்தகைய ஒரு உணர்வாக்கத்தின் வெளிப்பாடே. நட்சத்திர ஓட்டல்களில் ஆர்கானிக் உணவும், சராசரி உணவைவிட ஆர்கானிக் உணவு அணுகுமுடியாத விலையில் நிலையில் இருப்பதும் இதன் பின்னணி எனலாம். ஆக தன்னுருவாக்கமாக எனது ஊர் அமைந்த கதை என்பது சுயவிமர்சனமாக எனது பழமை ஏக்கத்தின் வெளிப்பாடே என்பதை பதியவைக்க விரும்புகிறேன்.

நான் எழுதத் துவங்கியது என்பது எனது சிறுவயதில் இருந்தே உருவான ஒன்று. சிறுவர் கதைகளில் துவங்கியது. இன்னும் சொல்லப்போனால் எனது அய்ந்தாம் வகுப்பில் துவங்கியது வாசிப்பும், நூலக பழக்கமும். நானே சிறுவர் இதழ்கள், கதைகள் கொண்ட ஒரு வாடகை நூலகம் வைத்து நடத்தினேன். அந்த காலத்தில் 75-களில் 5 காசுகள் துவங்கி 15 காசுகள் வரை உள்ள சிறுவர் கதைகள் வாங்கி அதை வாசிக்க 5 காசுகளுக்கு 3 புத்தகங்கள் என வாடகைக்கு விட்டு சிறநூலகம் நடத்தினேன். புத்தகங்கள் வாசிப்பதைவிட வாங்கி சேகரித்து அதை அடுக்கி பார்ப்பதே ஒரு ஆனந்தம் என்பதாக உருவாகிவிட்டது. இன்றுவரை வாசிக்க என வாங்கி சேர்த்த புத்தகங்கள் வாசித்ததைவிட அதிகமாகிவிட்டது.

எழுத்து என்பதற்கான அடிப்படை வாசிப்பும், வாசித்தவற்றைப்பற்றிய கற்பனைத்திறனும், சிந்திக்கும் பழக்கமும்தான். அதை தொடர்ந்து காப்பாற்றி வந்து உள்ளேன் என்பதே எனது இந்த ஐம்பது ஆண்டுகால வாழ்வில் மாறாத பழக்கமாகிவிட்டது. எனது ஒன்பதாம் வகுப்பில் வெகுசன வாசிப்பிலிருந்தும், வெகுசனபாணி கவிதை எழுத்துக்களிலிருந்தும் ஒரு பாயச்சலை உருவாக்கியது தமிழவனின் புதுக்கவிதை நாலு கட்டுரைகள் என்ற நூல்தான்.  அதன்பின் சீரிய இலக்கியத்திற்கு திரும்பி, தமிழவன் வழியாக அமைப்பியல் மற்றும் நாகார்ஜீனன், எம்டிஎம், பிரேம் வழியாக பின்நவீனம் அறிமுகமாகி, சக பயணியாக நண்பர் எஸ். சண்முகத்துடன் இந்த இலக்கியப் பயணம் தொடர்கிறது. நண்பர் ராமானுஜத்தின் தொடர்ந்த உரையாடல்கள் எனது எழுத்தை செழுமைப்படுத்தி வருபவை. தீராநதியில் தொடர்ந்து எழுத வாய்ப்பு தந்து எனது எழுத்தை பரவலாக்கியதில் நண்பர் கடற்கரய் பங்கு முக்கியமானது. எனது கல்லூரிக்கால நண்பர்கள் அரசு, ரவி சுப்ரமணியன், அமானுஷ்யன், கோமகன் மற்றும் என்னோடு சிறுபத்திரிக்கை நடத்திய நண்பர் ஆறுமுகம் மற்றும் பால்ய நண்பர்கள் மகேந்திரன், சிற்றரசு என அனைவருக்கும் எனது எழுத்து வளர்ச்சியில் ஒரு பங்கு உள்ளது என்பதை நன்றியோடு நினவு கூருகிறேன்.

எனது சிறுவயது எழுத்து இலக்கியத்தை கட்டமைத்ததில் சிறுவயது நண்பனாக இன்றுவரை என்னோடு உற்ற தோழமையாக இருந்து வரும் நண்பன் காலக்குறி ஆசிரியர் அ. ஜ. கான்.  எனது எழுத்திற்காகவே வறண்ட பாலைவனத்தில் காலக்குறி என்ற இதழை துவங்கி தொடர்ந்து எனது எழுத்தை அறிமுகப்படுத்தி  வந்தான். எனது விமர்சன எழுத்தில் எந்த கட்டுப்பாடும் இன்றி சுதந்திரத்தை உருவாக்கி தந்து, எனது எழுத்தை முழுமையாக வெளியிடுவதும், அதனால் கட்டுப்பாடின்றி எழுதுவதற்கும் சிந்திப்பதற்கும் வாய்பை உருவாக்கி தந்து உள்ளான். இந்த வாய்ப்புதான் எனது எழுத்தின் ஒரு சுதந்திரபலமாக, சமரசம் செய்துகொள்ள வேண்டிய அவசியமற்றதாக உள்ளது. தனிப்பட்ட முறையில் கானிற்கு நான் நிறைய கடப்பாடு உள்ளவன் என்பதை நன்றியோடு  பதிய விரும்புகிறேன்.
எனது எழுத்திற்கான வாய்ப்பையும், வளர்ச்சியையும் தந்த தமிழ்ச்சூழல் சிற்றிலக்கியங்கள், சிறு சூழல் அமைப்புகள், சிற்றிதழ்கள் அனைத்தையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
எனது இரண்டு நூல்கள் வெளிவந்து உள்ளது. மொழியும் நிலமும் என்ற தலைப்பிலும், நவீன தொன்மங்கள் நாடோடிக் குறிப்புகள் என்ற தலைப்பிலும். 90கள் தொடங்கி 2010 வரையிலான 20 ஆண்டு விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. தொடர்ந்து இலக்கிய அரசியல் மற்றும் கோட்பாடுகள் சார்ந்த கட்டுரைகள் எழுதி வருகிறேன். என் குறித்த எனது எழுத்து குறித்த விபரங்கள் சிற்றிதழில் வெளிவந்த எனது நேர்காணலில் விளக்கப்பட்டு உள்ளது. அதனால் கூறியது கூறலாக வேண்டாம் என அதை தவிர்க்கிறேன்.

இவ்விருதை பெறுவதற்கான எனது தகுதியைவிட எனது எழுத்தின் தகுதியை குறித்த எனது பார்வையை உங்களோடு இந்த ஏற்புரையில் பகிர்கிறேன். இலக்கியம், சமூகம், அரசியல் என்கிற ஒரு முப்பரிமாண அளவுகோலே எனது விமர்சனமுறையாக உருவாகி வந்து உள்ளது. நவீனத்துவம் மற்றும் பழமைவாதம்  இரண்டிற்கும் எதிரான ஒரு விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வருவது அவசியம் என்ற கருத்தைக் கொண்டிருக்கிறேன். பகுத்தறிவின் வளர்ச்சி என்ற பெயரிலான நவீனத்துவவாதத்திற்கும், கற்பணார்த்த பழமைவாதத்திற்கும். ரசனைசார்ந்த நுகர்வு வாதத்திற்கும் எதிரானதாக எனது விமர்சனமுறையை அமைத்துக் கொண்டு உள்ளேன். சமூக விஞ்ஞானப்பார்வையான மார்க்சிய துவங்கி அமைப்பியல், பின் அமைப்பியல், பின்நவீனத்தவம், பெண்ணியம், புதிய வரலாற்றுவாதம், சிதைவாக்கம் என் பல கோட்பாடுகளின் உள்ளோட்டத்தை விமர்சனமுறையில் அணுகி உருவாகி வந்ததே எனது பார்வை.

தற்போது எனது இலக்கிய அரசியல் என்றால் சிறபான்மையாதல் என்பதே. எப்பொழுதும் சிறுபான்மையாதல் என்பது ஒருவகையான ஜனநாயக இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கான வெகுமக்கள் அரசியல் எனலாம்.  சிறுபான்மை என்பது எண்ணிக்கை சார்ந்தது அல்ல. பன்மைத்துவம் சார்ந்தது. பெரும்பான்மை என்பதே ஓருமையானது. ஒற்றை சிந்தனையைக் கொண்டது. வன்முறையானது. யதார்த்தத்தில் பெரும்பான்மை எண்ணிக்கையில் சிறுபான்மையானது. சிறுபான்மை எண்ணிக்கையில் பெரும்பான்மையானது. காரணம் சிறுபான்மை என்பது பன்மை. அதனால் சிறுபான்மைகள் உண்டு. பெரும்பான்மைகள் கிடையாது. காரணம் பெரும்பான்மை என்பது ஒன்றுதான். பெரும்பான்மையை எதிர்ப்பதும் சூழலை உயிர்ப்புடன் வைப்பதும் சிறுபான்மைகளே.

சிறுபான்மையாக உள்ளவையே வளரும் தன்மைக் கொண்டது. பெரும்பான்மை என்பது வளர்ந்து தெவிட்டிய நிலையை அடைந்துவிட்ட ஒன்று. சிறுபான்மை பெரும்பான்மையாக வளர்வதற்கான இயக்க நிலையில் இருப்பது. அதுதான் சமூகபொதுபுத்திக்கு எதிரான பொராட்டத்தைக் கொண்டது. சமூகத்தை முன்னோக்கி நகர்த்துவது. இத்தகைய சிறசூழல் அமைப்புகளே நுண் அளவிலான சமூக இயக்கத்தை நகர்த்துபவை. சமூக எந்திரத்தின் பற்சக்கரமாக இயங்குபவை. இவ்வமைப்புகள் சமூகத்தில் ஏற்படுத்தப்படும் நுண் அளவிலான மாற்றமே அடுத்துவரும் சமூகத்தை முன்னோக்கி நகர்த்துவது. அதனால் எப்போதும் சிறுசூழலுடன், சிறுபான்மைகளுடன் இருப்பதும் சிறுபான்மையாக உருவாகிக் கொண்டு இருப்பதுமே உயிர்ப்புடன் வாழவைப்பது.

அவ்வகையில் “மேலும்” உள்ளிட்ட சிறுபத்திரிக்கை மற்றும் சிறசூழல் அமைப்புகள் தொடர்ந்து இயக்கத்தில் இருப்பவை. சமூகத்தின் கலாச்சார அரசியலில் நுண்அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தி, எதிர்கால சமூகத்தின் போக்கை நிர்ணயிப்பவை. அவற்றில் பங்கேற்பதும், அதன் கொளவரமும் முக்கியமானது என்பதே இந்த விருதை ஏற்பதற்கான எனது மனநிலை.

உலக வரலாற்றில் இலக்கியம் எப்போதம் சிறுபான்மையாக இருப்பதால்தான் அது உயிர்ப்புடன் உள்ளது. இந்த சமூகத்தை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. இலக்கியம் இல்லாமல் சமூகம் சாத்தியமில்லை. இலக்கியத்தை சமூகம் ஒதுக்கலாம். மதிப்பற்றதாக மாற்றி வைக்கலாம். ஆனால் இலக்கியம்தான் சமூகத்தை மதிப்புள்ளதாக மாற்றுகிறது. ஒரு இலக்கியம் சரியான சமூகத்தை கடடமைப்பதை கண்காணிப்பதும், அதை சரி செய்வதும் அதன் போக்கை மாற்றியமைப்பதும் அதை வாசிப்பாளனான மக்களிடம் கொண்டு சேர்ப்பதுமான பெரும்பணியே திறனாய்வாளர்களின் பணி. அவ்வகையில் திறனாய்வாளர்களுக்கும் விமர்சகர்களுக்கும் விருது வழுங்கி சமூகத்தின் சரியான போக்கை கட்டமைப்பை உருவாக்கும் பணியில் “மேலும்” அறக்கட்டளை ஈடுபட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சமூகச்செயல்பாடு என்று கூறி நன்றியோடு எனது ஏற்புரையை முடிக்கிறேன்.

அன்புடன்
ஜமாலன்
12-10-2014 (சிற்றேடு ஜனவரி-மார்ச் 2015)




அறிமுகம்


வணக்கம்!

மொழிதல்  - திறனாய்தலும் திறனாய்தல் நிமித்தமும்

தமிழில் ஒரு புதிய திணை திறானாய்விற்கான நிலம்

தமிழில் நவீன சிந்தனைகளுக்கான ஒரு களம்

வெளியிலும், காலத்திலும் நடப்பட்ட மனிதன் என்கிற பிம்பக் கட்டமைவு பற்றிய புதியதொரு அறிதலுக்கான முயற்சி்

தமிழில் நவீனத்திலிருந்து பின்நவீனம் நோக்கி நகர்வது பற்றிய ஒரு திறனாய்வு வெளி

வாரம் ஒரு புதிய கட்டுரை புதிய சிந்தனையுடன்